Case No.44493/2014 28 வருடங்கள் கடந்த நிலையில் கோப்புகள் கிடைப்பது அரிது என்று தெரிவித்திருப்பது சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல

3.பொதுத் தகவல் அலுவலர் 03/09/2014 தேதியிட்டு மனுதாரருக்கு அனுப்பிய கடிதத்தில் 1986-ம் வருடம் வழங்கப்பட்ட பதவி உயர்வு பற்றிய தகவல் கேட்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் உரிய கோப்பின் எண்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும், 28 வருடங்கள் கடந்துள்ள நிலையில் கோப்புகள் கிடைப்பது அரிதே என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பிரிவு 11-ன்படி மூன்றாம் தரப்பினர் தொடர்பான தகவல்கள் என்பதால், அவர்களின் அனுமதியின்றி தர இயலாது என்றும், மனு குறைதீர் கோரிக்கையாக உள்ளது என்றும் தெரிவித்து, தகவல்களை மறுத்துள்ளார். அதன்பின்னர், மனுதாரர், அரசு துணை செயலாளர், போக்குவரத்துத் துறை, தலைமைச் செயலகத்துக்கு, மேல் முறையீடு செய்துள்ளார். அதற்கு, மேல் முறையீட்டு அலுவலர் 26/09/2014 தேதியிட்டு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் மேல் முறையீட்டு அலுவலர் அரசு துணைச் செயலாளர் அல்ல என்பதால், மனு மோட்டார் வாகன பராமரிப்புத் துறை மேல் முறையீட்டு அலுவலருக்கு அனுப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், மனுதாரர் இவ்வாணையத்தினை அணுகியுள்ளார்.
4. ஆணையத்தின் முன் உள்ள ஆவணங்களைப் பரிசீலிக்கையில், பொதுத் தகவல் அலுவலரின் நிலைப்பாடு மற்றும் அதன் அடிப்படையில் அனுப்பப்பட்ட பதிலான, 28 வருடங்கள் கடந்த நிலையில் கோப்புகள் கிடைப்பது அரிது என்று தெரிவித்திருப்பது சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல. எனவே, மனுதாரர் கேட்டுள்ள இரண்டு தகவல்கள் / நகல்களையும் அலுவலகக் கோப்புாகளைத் தேடிப் பார்த்து இவ்வாணை கிடைக்கப் பெற்ற ஒரு மாதத்திற்குள் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்படுகிறது. அவ்வாறு அந்தக் கோப்புகள் கிடைக்கவில்லையென்றால், அந்தக் கோப்பை கண்டுபிடிப்பதற்கு என்னென்ன முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதனை விளக்குகின்ற வகையிலான பிரமாண வாக்குமூலம் ஒன்றினை அடுத்த விசாரணையின்போது பொதுத் தகவல் அலுவலர் இவ்வாணையத்திற்கு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. ஒரு மாதத்திற்குப் பின்னர் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அடுத்த விசாரணைத் தேதி இருதரப்பினருக்கும் பின்னர் தெரிவிக்கப்படும்.

Download

Case No.44493/2014 28 வருடங்கள் கடந்த நிலையில் கோப்புகள் கிடைப்பது அரிது என்று தெரிவித்திருப்பது சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்